ஹோர்முஸ் நீரிணை மீது ஈரானின் பிடி ; உலக எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தா?
ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஈரானின் 'நிச்சயமான உத்தி' என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவுடனான போரில் ஈரானின் முதன்மையான தற்காப்பு உத்தியாகும்.

இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான தமது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம், அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் உள்ள வெள்ளை மாளிகையின் ஆதரவு நாடுகளுக்கு ஒரு வலுவான முட்டுக்கட்டையையும் அச்சத்தையும் ஏற்படுத்த முடியும் என இஸ்லாமிய புரட்சிப்படை தெரிவித்துள்ளது.
எனவே, இந்த நீரிணையைத் தனது பிடியில் வைத்திருப்பது இஸ்லாமிய ஈரானின் மாற்ற முடியாத மற்றும் உறுதியான நிலைப்பாடு என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்திப் போக்குவரத்தில் மிக முக்கியமான இந்தப் பாதையைச் சுற்றி பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிய புரட்சிப்படையின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.