ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஓமனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், ஓமனுடனான ஒப்பந்தம் மாத்திரம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்குப் போதுமானதாக இருக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் நடைமுறையில் இருந்த கப்பல் போக்குவரத்து முறை தற்போது ஈரானுக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், நிரந்தர கப்பல் போக்குவரத்துப் பாதை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, தற்காலிக பாதை ஒன்றை உருவாக்குவது குறித்து ஓமனுடன் ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கப்பல் போக்குவரத்துப் பாதை தொடர்பான உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது என்பது அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், துறைமுக முற்றுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதுடன், ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக UAE குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பலில் தீ ஏற்பட்ட போதிலும், தீ உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், மாலுமிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கப்பல் தாக்குதல்களுக்கு ஓமன் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பாதையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஓமன் தெரிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை, உலகின் முக்கியமான எரிசக்தி கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நீரிணை வழியாக சர்வதேச சந்தைகளுக்கு பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால், நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவது உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல்வழிப் பாதுகாப்பு நெருக்கடியால் ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான்–ஓமன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பதும், அதன் பின்னர் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.