ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ஈரான் தரப்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
ஹோர்முஸ் நீரிணை எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்துகொண்டுள்ளார்.

அப்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சீன பயணத்தில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஈரானிய அமைச்சர் அராக்சி கூறியதாவது: “ஹோர்முஸ் நீரிணை பொறுத்தவரையில் அது முழுமையாகத் திறக்கப்பட வேண்டுமெனவே நாங்களும் விரும்புகிறோம்.
எங்களைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது. எங்களுடன் போரிடும் நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் அதன் வழியாகச் செல்லலாம்.
அவ்வழியாகப் பயணிக்க வேண்டிய கப்பல்கள் எங்கள் இராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பாதையில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உள்ளிட்ட தடைகளைக் கடந்து செல்வதற்கு நாங்கள் அவர்களுக்கு வழிக்காட்டுவோம். இதுபோல், ஏராளமான இந்திய கப்பல்களுக்கு நாங்கள் வழிகாட்டி இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா உடனான ஈரானின் போர் தொடங்கியது முதல் ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி 3 நாள் அரசு முறைப் பயணமாக, கடந்த 13ஆம் திகதியன்று இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.