யுரேனியம் ஏற்றுமதிக்கு முழுத் தடை ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி உத்தரவு
ஈரானிடம் உள்ள ஆயுதத் தயாரிப்பிற்கு நெருக்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த சூழ்நிலையிலும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என அயதுல்லா மொஜ்தபா கமேனி, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணு திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
குறிப்பாக, அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படக்கூடிய உயர்மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் சர்வதேச கவலைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், நாட்டின் அணு வளங்களை பாதுகாப்பது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய விடயமாக கருதப்படுவதாக அயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஈரான் தனது அணு திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்புகளை குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதேவேளை, ஈரான் தனது அணு திட்டம் அமைதியான தேவைகளுக்காக மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக வலியுறுத்தி வருகிறது.
இந்த புதிய உத்தரவு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.