அமெரிக்க தளங்களை தாக்க சீன செயற்கைக்கோள் பயன்படுத்திய ஈரான்
கடந்த ஜூலையில் ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் ராணுவம், சீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதில் அமெரிக்க ராணுவ தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. 3 வீரர்கள் உயிரிழந்தனர். சீன உளவு செயற்கைக்கோள்களின் உதவியால் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

சீன செயற்கைக்கோள்களின் உதவி
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களையும் சீன செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஈரான் ராணுவம் கண்காணித்து வருகிறது. இதன்மூலம் எதிரிகளின் கப்பல்கள் மீதும் அந்த நாடு மிகத் துல்லியமாக ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்துகிறது.
சீனாவின் உதவி இல்லாமல் ஈரான் ராணுவத்தால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என்றும் அமெரிக்கா ஆணித்தரமாக கூறியுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில் , ஈரான் ராணுவத்தின் முதுகெலும்பாக ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளன. இவற்றை தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சீனாவில் இருந்து 1,300 முறை விமானங்கள், கப்பல்கள் மூலம் உதிரி பாகங்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
ஜிபிஎஸ் கருவிகள், விமான இன்ஜின்கள், மோட்டார்களும் சீனாவில் இருந்து ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதேவேளை அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இத்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.