லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: பலி எண்ணிக்கை 3,412 ஆக உயர்வு!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,412 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 10,269 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 2 முதல் மே 31 வரையிலான காலப்பகுதியில் பதிவான உயிரிழப்புகளின் அடிப்படையில் இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவரப் பல்வேறு தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

லெபனானின் அரசு செய்தி நிறுவனமான 'தேசிய செய்தி முகமை' வெளியிட்டுள்ள தகவலின்படி, தெற்கு லெபனானில் உள்ள பல நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தொடர் தாக்குதல்களை நடத்தின.
பின்ட் ஜபெய்ல் மாவட்டத்தில் உள்ள 'டீர் கிஃபா' நகரம் மற்றும் டயர் மாவட்டத்தில் உள்ள 'செடிக்வெய்ன்' ஆகிய பகுதிகள் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகின.
பின்ட் ஜபெய்ல் மாவட்டத்தின் 'ஹாரிஸ்' பகுதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் குறிவைத்து இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
மர்ஜாயூன் மாவட்டத்தில் உள்ள 'தபாயின்' நகரின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து இரண்டு முறை கடுமையான குண்டுமழை பொழிந்தன.
லெபனானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான 'டயர்' மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து, வெள்ளைப் புகையை உமிழ்ந்தபடி போலித் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, டயர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களையும் உடனடியாக வெளியேறுமாறு இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல் இராணுவம் கட்டாய உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஊடுருவலை நிறுத்த சர்வதேச அளவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், எல்லையோர நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தாக்குதல்களால் லெபனானில் மனிதநேய நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.