தாக்குதல்கள் தொடர்ந்தால் பரந்த அளவிலான பதிலடி தரப்படும் என ஈரான் எச்சரிக்கை
அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலமும், ஹோர்முஸ் நீரிணை, ஓமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஈரானியக் கடற்கரைகள் மற்றும் கப்பல்களை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலமும் தங்களது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அந்தப் படை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை தொடர்ந்தும் பேணி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையில் பழிவாங்கும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இன்றிரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒரு எச்சரிக்கை மட்டுமே” என தெரிவித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, எதிர்காலத்திலும் அத்துமீறல்கள் தொடருமானால் பதிலடி நடவடிக்கைகள் இன்னும் பரந்த அளவிலும் தீவிரமான முறையிலும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த அறிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்த புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.