நிபந்தனையை நிறைவேற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
எனினும், தாக்குதல்களை நிறுத்துவதுடன், அப்பகுதியில் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முற்றுகையையும் நீக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
இரு தரப்பினரும் கடந்த ஜூன் 17ஆம் திகதி மேற்கொண்ட இடைக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி உடன்பாட்டை எட்ட வேண்டியிருந்தது.
எனினும், ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இதுவரை எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜூலை 7ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஈரானும் அறிவித்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குதல், முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவித்தல் மற்றும் அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவை முக்கிய நிபந்தனைகளில் அடங்குவதாக ஈரான் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.