ஈரானின் அணைகள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரானின் அணைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முற்பட்டால், அதற்குச் சமமான பதிலடி வழங்கப்படும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் பேச்சாளர் மொஹெப்பி, ஈரானின் பொதுமக்கள் பயன்பாட்டு உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான பதில் நடவடிக்கை தவிர்க்க முடியாததாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அமைந்துள்ள அணைகளுக்கும், நிலத்தடி ஏவுகணைத் தளங்களாகச் சந்தேகிக்கப்படும் சில இடங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அண்மையில் வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன், குறித்த அணைகள் இராணுவத் தேவைகளுக்கான நீர் மற்றும் மின்சார விநியோகத்துடனும் தொடர்புபட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில், ஈரானின் அணைகள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அவ்வாறான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டால் அதற்குச் சமமான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.