நாடு திரும்ப வேண்டாம்... ஈரானிய பெண்ணுக்கு மிரட்டல்
கஜகஸ்தானில் சர்வதேச போட்டி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றதாக கூறி, விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு ஈரானிய நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரானிய செஸ் விளையாட்டு வீரரான Sara Khadem கஜகஸ்தானில் நடந்த சர்வதேச போட்டி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுள்ளார். ஆனால் அவர் ஸ்பெயின் நாட்டுக்கு திரும்பிய நிலையிலேயே, அவர் இனி நாடு திரும்ப வேண்டாம் என்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது அலைபேசி இலக்கத்திற்கு பலர் தொடர்புகொண்டு, இனி நாடு திரும்ப வேண்டாம் என எச்சரித்துள்ளனர். குறிப்பிட்ட சிலர் அவரை தொடர்புகொண்டு, நாடு திரும்பவும், அவரது பிரச்சனைகளை பேசி முடிவுக்கு கொண்டுவரலாம் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே, Sara Khadem உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் ஸ்பெயின் பத்திரிகைகள் சில தகவல் வெளியிட்டதுடன், அவர் ஈரான் செல்லும் முடிவில் இல்லை எனவும், ஸ்பெயின் நாட்டுக்கு திரும்புவார் எனவும் குறிப்பிட்டிருந்தது.
கஜகஸ்தானில் அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அவர் ஸ்பெயின் புறப்படும் வரையில் கஜகஸ்தான் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்தே ஈரான் நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் திரண்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
22 வயதான குர்து இளம்பெண் ஒருவர் ஹிஜாப் முறையாக அணியாதது தொடர்பில் சிறப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் தாக்கியதால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த விவகாரம், ஈரானில் 1979 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகப்பெரிய போராட்டமாக வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.