பஹ்ரைனிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் தளத்தின் ரேடார் அமைப்பை ஆறு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்கியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் செபா (Sepah) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைனின் அல்-ரிஃபா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் அமைப்பே தாக்குதலின் இலக்காக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளையும் அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடியின் இரண்டாம் கட்டமாகவே இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரானின் சிரிக் நகரிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது கடந்த வாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்க இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் விலையுயர்ந்த ஆளில்லா விமானங்கள் தொடர்ச்சியாகச் சுட்டு வீழ்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ள IRGC, எதிர்காலத்தில் அமெரிக்க இலக்குகளை நோக்கி அதிக எண்ணிக்கையிலான ஈரானிய ட்ரோன்கள் அனுப்பப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானுக்கு கடும் கண்டனம்
இதற்கிடையில், பஹ்ரைன் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும் பஹ்ரைனின் இறையாண்மையையும் மீறுவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சகம், அமெரிக்காவுடனான மோதல்களுக்குப் பழிவாங்குவதற்காக பஹ்ரைனின் நிலப்பரப்பைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் ஈரானே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பஹ்ரைன் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, ஈரானிலிருந்து ஏவப்பட்ட பல வான்வழித் தாக்குதல்களைத் தமது பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்துள்ளதாக பஹ்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் மையத்தைத் தாக்கி அழித்துள்ளதாக வெள்ளிக்கிழமை IRGC அறிவித்திருந்தது.
எனினும், தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் சுயாதீனமான உறுதிப்படுத்தல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான இராணுவப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மத்திய கிழக்கின் பிராந்தியப் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.