அஜர்பைஜானின் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்கள்
அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தாக்குதலில் விமான நிலைய முனையக் கட்டிடம் சேதமடைந்ததுடன், அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் இரண்டுபேர் காயமடைந்ததாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலுக்கு அஜர்பைஜான் கண்டனம் தெரிவித்துள்ளது.

"அஜர்பைஜான் பிரதேசத்தின் மீதான இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானது மற்றும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.
இஸ்லாமியக் குடியரசான ஈரான் இந்த விவகாரத்தை விரைவில் தெளிவுப்படுத்தவேண்டும், வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்." என அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் "பொருத்தமான பதிலடி நடவடிக்கைகளை" மேற்கொள்ளும் உரிமையை அஜர்பைஜான் கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.