ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஈரானிய வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இரத்து
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதார மற்றும் வானூர்திப் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்குள் ஈரானிய வானூர்தி நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து வானூர்தி சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய வானூர்தி நிறுவனங்கள் தங்களது வானூர்தி நிலையங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையகம் (GCAA) அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதியன்று அமெரிக்க பொக்கிஷாகத் திணைக்களம் 27 ஈரானிய வானூர்தி நிறுவனங்களுக்குத் தடைகளை விதித்திருந்ததுடன், அத்தகைய நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.
இந்த அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த இரத்து நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஈராக், ஓமான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் ஈரானிய வானூர்திப் போக்குவரத்து மற்றும் வான்வெளியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியுள்ளன.
அத்துடன், 'துருக்கிய ஏர்லைன்ஸ்' (Turkish Airlines) நிறுவனம் 2027 மார்ச் வரை ஈரானுக்கான தனது வானூர்திப் பயணங்கள் எதையும் திட்டமிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மத்திய வங்கி, ஈரானின் 'பேங்க் மெல்லி' (Bank Melli) கிளைகளின் நிதி மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகளையும் தடைசெய்து பொருளாதாரக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.