நோபல் அமைதி பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி ; ஈரான் நீதித்துறை அதிரடி
ஈரானில் மனித உரிமைகளுக்காகப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு (Narges Mohammadi), மேலும் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் நர்கீஸ் முகமதிக்கு, மேலும் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நர்கீஸ் முகமதியின் சட்டத்தரணி முஸ்தபா நீலி தெரிவித்துள்ள தகவலின்படி, மஷாத் (Mashhad) நகரில் உள்ள நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது 'கூட்டுச் சதி' குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறையும், அரசுக்கு எதிரான 'பிரசாரம்' செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் இரண்டு ஆண்டுகள் பயணத் தடை மற்றும் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 740 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கோஸ்ஃப் நகருக்கு இரண்டு ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டு வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
53 வயதான நர்கீஸ் முகமதி, கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2024 டிசம்பரில் மருத்துவ காரணங்களுக்காக அவர் விடுப்பில் வெளிவந்திருந்த நிலையில், மனித உரிமை சட்டத்தரணி ஒருவரின் நினைவுச் சடங்கில் நீதிக்காகக் குரல் எழுப்பியதால் மீண்டும் டிசம்பர் மாத இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நர்கீஸ் முகமதி, சிறையில் இருந்தபோது பலமுறை மாரடைப்புக்கு உள்ளானவர்.
இத்தகைய உடல்நலக் குறைபாடுகளைக் கருத்திற் கொண்டு அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.