ஈரான் உயரதிகாரி மகளின் திருமண ஆடையால் வெடித்த புதிய சர்ச்சை
முஸ்லிம் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரான் நாட்டில், உச்ச தலைவரின் உதவியாளர் மகள் 'ஹிஜாப்' அணியாமல், அரைகுறை ஆடையுடன் திருமணம் செய்திருப்பது அந்நாட்டு பெண்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், ஷரியத் சட்டமானது கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும்.
ஆடை தொடர்பான போராட்டங்கள்
கடந்த 2022ம் ஆண்டு, தலைமுடி முழுமையாக மறையும்படி ஹிஜாப் அணியாததாக, மாஷா அமினி என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ஆடை தொடர்பான போராட்டங்கள் நடந்தன. ஆனால், கட்டுப்பாடுகளை குறைத்துக்கொள்ள அரசு மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரான அலி ஷம்கானியின் மகள் திருமணம் சமீபத்தில் நடந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ஷம்கானியின் மகள் பதேமே, ஹிஜாப் அணியாமல் மார்பளவு மட்டுமே உள்ள கவுன் அணிந்து இருக்கிறார். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் ஆட்சேபம் தெரிவித்து, அரசுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.