மோசடிகளைத் தடுக்க புதிய வங்கி விதிகள்: கனடா அரசு அறிவிப்பு
கனடாவின் மத்திய அரசாங்கம், வங்கிகள் மோசடிகளை கண்டறிந்து தடுக்கும் புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய சட்ட திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், வங்கிகள் கணக்குதாரர்களின் வெளிப்படையான சம்மதத்தைப் பெற்ற பிறகே சில பணமாற்று அல்லது கட்டண வசதிகளை இயக்க முடியும்.
மோசடியாளர்கள் இவ்வசதிகளைப் பயன்படுத்தி பணத்தை திருடும் நிகழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கைகள்
மேலும், கணக்குதாரர்கள் தாங்கள் விரும்பாத வசதிகளை முடக்கவும், பரிமாற்ற வரம்புகளை மாற்றி தங்களது கணக்குகளை பாதுகாக்கவும் அனுமதி அளிக்கப்படும்.
அதேநேரத்தில், “பொருளாதார துஷ்பிரயோகம்” எனப்படும் — ஒருவரின் பணம் அல்லது கடனுக்கான அணுகலை மற்றொருவர் துஷ்பிரயோகமாக கட்டுப்படுத்தும் — நிலைகளைக் கையாள்வதற்காக, வங்கிகளுடன் இணைந்து புதிய “தன்னார்வ பொருளாதார துஷ்பிரயோகம் நடத்தை விதிமுறைகள்” (Economic Abuse Code of Conduct) உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வரவிருக்கும் வசந்த காலத்திற்குள், பணமோசடி, ஆன்லைன் மோசடி, மற்றும் இணைய தந்திரங்கள் போன்றவற்றை விசாரிக்கவும், சட்டவிரோத வருவாயை மீட்டெடுக்கவும் “நிதி குற்றங்கள் அமைப்பு” (Financial Crimes Agency) ஒன்றை உருவாக்க சட்டம் கொண்டுவரப்படும் எனவும் லிபரல் அரசு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பை உருவாக்குவதாக 2021 தேர்தல் அறிக்கையில் லிபரல் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.