சக்கரம் கழன்று விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஈரான் விமானம் ; அச்சத்தில் உறைந்த பயணிகள்!
ஈரானின் மஷ்ஹாத் நகரிலிருந்து கெர்மான்ஷாவிற்குப் புறப்பட்ட செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் (Sepehran Airlines) நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், டேக்-ஒஃப் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்ததால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
மஷ்ஹாத் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இயந்திர தொழில்நுட்பக் கோளாறு
சக்கரம் கழன்று விழுந்ததைத் தொடர்ந்து, இயந்திர தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயணிகளுக்கு விமானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விமானம் பலத்த அதிர்வுக்குள்ளாகி மிகக் கடுமையாகக் குலுங்கியதால், நிலைமையை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தைத் திருப்பி மீண்டும் மஷ்ஹாத் நோக்கி இயக்கினர்.
விமானத்தின் இந்த அதிர்வின் காரணமாக, விமானப் பயணியர் அறையின் கூரை அமைப்புகள் மற்றும் தலைக்கு மேல் உள்ள பெட்டிகள் சேதமடைந்தன.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளிகளின்படி, மேலிருந்த பெட்டிகள் உடைந்ததில் பயணிகளின் உடைமைகள் கீழே விழுந்து சிலர் மீது மோதியுள்ளன. இதனால் அச்சமடைந்த பயணிகள் பயத்தில் கதறியபடியும், பிரார்த்தனைகளில் ஈடுபட்டவாறும் பெரும் பதற்றமடைந்துள்ளனர். இருப்பினும், விமானிகள் திறம்படச் செயற்பட்டு விமானத்தை மஷ்ஹாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஷ்ஹாத் விமான நிலையத்தில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறான அவசர நிலையைச் சந்திப்பது அண்மைக்காலத்தில் இது இரண்டாவது முறையாகும்.