கனடாவில் மூடப்பட்டுள்ள ஈரான் தூதுரக வளாகத்திற்குள் அத்து மீறி பிரவேசித்தவர் கைது
கனடாவின் ஒட்டாவா நகரில் மூடப்பட்ட நிலையில் உள்ள ஈரான் தூதரகத்தில், அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது சேதப்படுத்தல் சம்பவம் நடந்ததையடுத்து, அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 12 ஆம் திகதி காலை 5.50 மணியளவில், நகர மையத்தில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஒருவர் வேலியை தாண்டியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒட்டாவா பொலிஸார் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
கனடா 2012 ஆம் ஆண்டு ஈரானுடன் தூதரக உறவுகளை துண்டித்ததையடுத்து, அந்தக் கட்டிடம் காலியாகவே இருந்து வருகிறது.

தூதரக உறவுகள்
சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், பாதுகாப்பு வேலிக்குப் பின்னால் நின்ற போராட்டக்காரர் ஒருவர், நுழைவாயிலின் மேலே இருந்த ஈரானின் தேசிய சின்னத்தை அகற்றுவதும், ஒரு ஜன்னலின் அருகே சேதப்படுத்துவதும் பதிவாகியுள்ளது.
அகற்றப்பட்ட அந்தச் சின்னம், ஈரான் இஸ்லாமிய குடியரசின் முத்திரையாகும்; அது நாட்டின் கொடியிலும் இடம்பெறுகிறது.
பின்னர், அந்த இடத்தில் 1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு ஈரானின் தேசிய அடையாளமாக இருந்த “சிங்கம் மற்றும் சூரியன்” குறியீடு இடம்பெற்ற கொடி மற்றும் பலகை வைக்கப்பட்டுள்ளதும் காணொளியில் தெரிகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தக் காணொளியைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும், “மேலும் பிற குற்றங்கள்” தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் தெஹ்ரானில் தொடங்கிய அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பரவி வரும் சூழலிலேயே இந்த தூதரக சேதப்படுத்தல் சம்பவம் நடந்துள்ளது. தூதரக சேதத்தின் முழு விளைவுகள் இன்னும் தெளிவாகவில்லை.
வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தாலும், தூதரகம் அமைந்துள்ள நாடு தூதரக வளாகங்களை “மரியாதை செய்து பாதுகாக்க” கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.