போர்பஸ் பட்டியலில் இடம் பிடித்த இலங்கை யுவதி
இலங்கையை பிறப்பிடமாகவும், பின்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராந்தி கோமஸ் என்ற யுவதி சர்வதேச போர்பஸ் சஞ்சிகையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
30 வயதுக்கும் குறைந்த 30 ஐரோப்பியர்களில் ஒருவராக இராந்தி கோமஸ், போர்பஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இராந்தி, சேர்விஸ்போர்ம் (Serviceform ) எனப்படும் இணைய சேவை நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் கடினமான தொழில்நுட்பங்களை இலகுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வரும் நிறுவனமாக இந்த நிறுவனம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
28 வயதான இராந்தி ஐரோப்பிய போர்பஸ் பட்டியலில் இடம்பிடித்த முதல் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்பஸ் சஞ்சிகையில் இடம்பிடிக்க வேண்டும் என்பது தமது சிறுவயது கனவு எனவும், பட்டியலில் உள்ளடக்கப்பட்டமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 வயது அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த இராந்தி, மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்துள்ளார்.
மெல்பர்னில் நிகழ்வுகளுக்கு கோப்பி வழங்கும் சேவையொன்றை ஆரம்பித்த இராந்தி, பின்னர் டிஜிட்டல் சந்தையில் காணப்படும் வெற்றிடத்தை புரிந்து கொண்டு தனது தொழிற்துறையை மாற்றிக்கொண்டார்.
இராந்தியின் நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் பாரியளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உலகின் முதனிலை செல்வந்தர்கள் முயற்சியான்மையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை பட்டியல் படுத்தும் முன்னணி சஞ்சிகையாக போர்பஸ் சஞ்சிகை திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.