கனடாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த உதவியொன்று விரைவில் நிறுத்தம்
கனடாவில் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், கனடாவில் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஃபெடரல் அரசு நிதி உதவி அளித்துவருகிறது.
அந்த நிதி உதவி, ஆகத்து மாதம் 30ஆம் திகதியுடன் நிறுத்தப்பட உள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகத்து மாதம் 30ஆம் திகதிக்குள், ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், இவ்வளவு குறுகிய காலகட்டத்துக்குள் அவர்கள் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்வது ஒரே இரவில் சாத்தியமல்ல என்கிறார் துறைசார் நிபுணரான Adaoma Patterson.
ஆக, ஹொட்டல்களிலிருந்து வெளியேற்றப்படும் அந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் சிலர் தெருக்களில் தஞ்சம் புகவும், பாதுகாப்பற்ற இடங்களில் தங்கவும் நேரிடலாம் என்று கூறும் அவர், அப்படி பாதுகாப்பற்ற நிலையில் தங்கும் யாரும் உடல் நலம் பாதிக்கப்படவும், மிக மோசமான சூழ்நிலைகளில் மரணிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்.