ஜப்பானில் இரு மடங்காக அதிகரித்த தீவுகள் !
ஜப்பான் தனக்குச் சொந்தமான மேலும் 7,273 புதிய தீவுகளை கண்டுபிடித்துள்ள நிலையில் அந்நாட்டின் தீவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதிகளில் 6,852 தீவுகள் காணப்பட்டன. இந்நிலையில் , புதிய ஆய்வுகளின்படி, ஜப்பானிக்குரிய தீவுகளின் எண்ணிக்கை 14,125 ஆக அதிகரித்துள்ளதாக கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ஆய்வு நடவடிக்கை
இது முந்தைய எண்ணிக்கையை விட 7,273 அதிகமாகும். இது தொடர்பான உத்தியோகபூர்வ விபரம் சில வாரங்களுக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி எம்.பி ஒருவர் 2021 டிசெம்பரில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தையடுத்து, இந்த ஆய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
தீவுகளின் சரியாக எண்ணிக்கையை அறிந்துகொள்வதானது, தேசிய நலன்களுடன் தொடர்புடைய முக்கியமான ஒரு நிர்வாக விடயம் என அவர் கூறியிருந்தார். பசுபிக் சமுத்திரம், ஒகோட்ஸ்க் கடல், ஜப்பானிய கடல், கிழக்குச் சீனக் கடல் ஆகியவற்றினால் ஜப்பான் சூழப்பட்டுள்ளது .
அங்கு அடிக்கடி பூகம்பங்கள், கடலடி எரிமலை வெடிப்புகள் ஏற்படும் நிலையில், புதிய தீவுகள் உருவாகுவதும் மறைவதும் வழக்கமாகும். இந்நிலையில் 1987 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 100 மீற்றருக்கு மேற்பட்ட சுற்றளவுடைய தீவுகள் காணப்பட்டன.
செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை தவிர்ப்பதற்காக, புதிய ஆய்வுகளில், டிஜிட்டல் படவரைவு தொழில்நுட்பம், கடந்த கால வான்வழி புகைப்படங்கள், மற்றும் ஏனைய தரவுகள் பயன்படுத்தப்பட்டதாக கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.