இஸ்ரேலின் கோர தாக்குதல்; காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 704 பேர் பலி
கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல், காசா போர் இன்று 19 நாளாகவும் நீடித்துவரும் நிலையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவருகின்ற்மை உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
அதேசமயம் இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளதால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதனையடுத்து காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.