இஸ்ரேல் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு 66.7 சதவீதமாக அதிகரிப்பு
இஸ்ரேலில் நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் நேற்று (27) மாலை 6.00 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 66.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் மத்திய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே நேரத்திற்கு பதிவான 57.7 சதவீத வாக்குப்பதிவுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என்பதுடன், இஸ்ரேல் தேர்தல் வரலாற்றில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

இதுவரை 4.8 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் டீன் லிவ்னே (Dean Livne) தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் குறைந்த அளவிலான வாக்குப்பதிவே பதிவாகியுள்ளது. கோலான் குன்றுகளில் உள்ள டுரூஸ் (Druze) நகரமான மஜ்தல் சம்ஸில் (Majdal Shams) 26.3 சதவீதமும், அதன் அருகில் உள்ள அலவைட் (Alawite) நகரமான கஜாரில் (Ghajar) 28.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, கலீலியில் உள்ள யுவால் (Yuval) பகுதியில் 91.5 சதவீதமும், பெயிட் ஹோக்லாவில் (Beit Hogla) 88.2 சதவீதமும், வடக்கு இஸ்ரேலின் ஹசோனில் (Hazon) 87 சதவீதமும் என மிக அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.