இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 6-வது நாளாக நீடிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வருகிறது.
டெல் அவிவ், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இரு தரப்புக்கு இடையேயான போர் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது.
இந்த போரில் இரு தரப்பிலும் சேர்த்து கிட்டதட்ட 3,600 பலியாகியுள்ளனர். போரினால் காசா முனையில் இருந்து மட்டும் சுமார் 3,38,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.