சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்த இஸ்ரேல்
இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் நேற்று முன்தினம் (28) அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்தை இன்னும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில் இஸ்ரேல் முதல் முறையாக அதனை செய்துள்ளது.
இதற்கு சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆபிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று சோமாலியா. இந்த நாட்டின் ஒரு பகுதியில் இந்திய பெருங்கடல் உள்ளது. இன்னொரு புறம் செங்கடல் உள்ளது.

தனி நாடு
இந்த 2 கடல்களும் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தான் சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த சோமாலிலாந்து தனி நாடு கோரியது. சோமாலிலாந்து ஏடன் வளைகுடாவில் அமைந்துள்ளது. இதனால் அது முக்கியமான பகுதியாகும்.
இதனால் சோமாலியா, சோமாலிலாந்தை தனி நாடாக்க விரும்பவில்லை. இதனால் சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்து தனி பிரதேசமாக செயற்பட்டு வருகிறது. 1991-ல் சோமாலியாவிலிருந்து பிரிந்து தன்னாட்சியுடன் சோமாலிலாந்து செயல்பட்டு வருகிறது.
சோமாலிலாந்து மக்கள் தங்களை தனி நாடாக அறிவித்து கொண்டனர். சோமாலிலாந்துடன் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தாய்வான் உள்ளிட்ட நாடுகள் தூதரகம் ரீதியிலான உறவை பேணி வந்தாலும் கூட தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் தான் சோமாலிலாந்தை முதல் நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை சோமாலிலாந்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதோடு அந்த நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாய துறை மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.