இஸ்ரேலின் தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பலி
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது.
தெற்கு லெபனான் மற்றும் வடக்கு இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் ஹெஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் 13 மாதங்களாகத் தொடர்கின்றது.
இந்த நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 3,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக லெபனானின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை கொல்லப்பட்டவர்களில் 589 பெண்களும், 185 சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 13,492 பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் பொதுச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ஹெஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கடந்த ஒரு மாத காலமாக லெபனானில் நாளொன்றுக்கு ஒரு சிறுவர் கொல்லப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.