சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறிய இஸ்ரேல்
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்ததால் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இப்போரில் காசாவின் வடக்கு, மத்திய பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளது. காசா போரில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.
இதில் ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா கோரியது.
இதையடுத்து விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், இஸ்ரேலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ரபா நகருக்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும்.
அந்த நகரம் வழியாக காசாவின் பிற பகுதிகளுக்கு உதவி பொருட்கள் செல்ல எல்லைகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகளை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் தரப்பு கூறுகையில்,
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மோசமானது, ஒழுக்க ரீதியில் அருவருப்பானது. காசாவில் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. ரபாவில் போர் இலக்குகள் தொடரும். காசா பகுதி முழுவதிலும் ஹமாசை ஒழித்துக்கட்டவும், பிணைக்கைதிகளை மீட்கவும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றனர்.