காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; 60-க்கும் மேற்பட்டோர் பலி
காசாவில் நிவாரண மையமாக இருக்கும் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அறுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை தபேன் பள்ளி மீது நடத்தப்பட்ட அத்தாக்குதலில் 47 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
காசா பகுதியின் இதர பள்ளிகளைப் போலவே போரினால் தங்கள் வீடுகளை இழந்த மக்களுக்கு இப்பள்ளியிலும் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல் ராணுவம், பள்ளிக்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தையே தாக்கியதாக ஆதாரம் ஏதுமின்றி குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 6ஆம் திகதி வரை காசாவில் உள்ள 564 பள்ளிகளில் 477 பள்ளிகள் போரில் நேரடியாக பாதிக்கப்பட்டதோடு சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களில் 39 ஆயிரத்து 600 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் 91 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு கூறியது.