காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் பலி
காசா நகரின் சப்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
சப்ரா பகுதியில் இஸ்ரேலிய படையினர் குண்டுகள் மற்றும் தாங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குப் பின் குறைந்தது 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் உறவினர்கள் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல்கள் கேட்கின்றன ஆனால் எட்ட முடியவில்லை,” என ஒருவரின் உருக்கமான வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளைத் தோண்டி மீட்பவர்களை இலக்கு வைத்து ட்ரோன்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும், “ஐந்து பேர் மீட்கச் சென்றால் நான்கு பேர் கொல்லப்படுகின்றனர்” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே மத்திய காசாவில் உள்ள புரைஜ் அகதி முகாமில் நடத்தப்பட்ட மற்றொரு வான் தாக்குதலில் 4 சிறுவாகள் உள்ளிட்ட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் முதல் தொடர் தாக்குதல்களில் இதுவரை 65,283 பேர் உயிரிழந்துள்ளார்கள், 166,575 பேர் காயமடைந்துள்ளனர். பசியால் மரணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தம் 440 ஆக உயர்ந்துள்ளது.