உருக்குலைந்த காசாவில் முழக்கமிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு; மக்கள் அதிருப்தி
இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவு குறைந்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா சென்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவுக்கு சென்றிருக்கிறார். போர் தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சரும் காசாவுக்கு சென்றிருக்கின்றார்.
ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது
பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றம் உச்சம் எட்டும்போது அது உயிர் பலிகளை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை அறிவித்து, போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது. இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர்.
அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 45,000 பேர் பாலஸ்தீனத்தில் உயிரிழந்ததுடன் மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ள அதேசமயம் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவில் பேட்டியளித்த நெதன்யாகு, “ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது” என கூறியுள்ளார்.
அதேசமயம் ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக தலையிட்டு கூட போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் காசாவுக்கு சென்று நெதன்யாகு பேட்டியளித்திருப்பது, பாலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.