இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வலண்டினோ காலமானார்
உலக புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வெலண்டினோ கரவானி தமது 93 ஆவது வயதில் இன்று காலமானார்.
ரோமில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் சூழ அவர் அமைதியாக உயிர்நீத்ததாக வெலண்டினோ அறக்கட்டளை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆடை வடிவமைப்பு உலகில் 'வெலண்டினோ ரெட்' என்ற தனித்துவமான சிவப்பு நிறத்தை அறிமுகப்படுத்தியவர் இவராவார். இது இன்றுவரை உலகப் புகழ்பெற்ற ஆடை அடையாளமாகத் திகழ்கிறது.
இளவரசி டயானா, அமெரிக்காவின் முன்னாள் முதற் பெண்மணி ஜெக்குலின் கென்னடி, நடிகை எலிசபெத் டெய்லர் மற்றும் நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு ஆடை வடிவமைத்த பெருமை இவருக்கு உண்டு.

ஜோர்ஜியோ அர்மானி மற்றும் கார்ல் லாகர்ஃபெல்ட் ஆகியோருக்கு இணையாக, ஆடை வடிவமைப்புத் துறை வணிகமயமாக மாறுவதற்கு முன்பிருந்த காலத்தின் மிகச்சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
(லாகர்ஃபெல்ட் 2019-இலும், அர்மானி கடந்த செப்டம்பரிலும் காலமானமை குறிப்பிடத்தக்கது). வெலண்டினோ கரவானின் உடல் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) முற்பகல் 11 மணியளவில் ரோமில் உள்ள புகழ்பெற்ற Basilica di Santa Maria degli Angeli e dei Martiri தேவாலயத்தில் இறுதிச் சடங்குநடைபெறும்.
1960 ஆம் ஆண்டு தனது சொந்த பெயரில் நிறுவனத்தைத் தொடங்கி, அதனை ஒரு உலகளாவிய சாம்ராஜ்யமாக மாற்றிய வெலண்டினோ கரவானி, 2008-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும், அவரது கலைத்திறன் இன்றும் ஆடை வடிவமைப்பு உலகின் ஒரு உன்னத வழிகாட்டியாகத் திகழ்கிறது.