அனைத்து வெளிநாட்டினருக்கும் தடை; ஜப்பான் அதிரடி
பிரிட்டன் முழுவதும் தீவிரமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இந்தத் தடை முதற்கட்டமாக நாளை தொடங்கி ஜனவரி 31 வரை நீடிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம், பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைய ஜப்பான் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் ஏழு பேருக்கு விமான நிலையங்களில் புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஐந்து பேரும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு பேரும் அடங்குவர்.
நவம்பரில் ஜப்பானிய நாட்டினருக்கும், அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கான விலக்கை அளித்த ஜப்பான் தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளது.
இப்போது நுழைபவர்கள் ஜப்பானுக்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சோதனையின் ஆதாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் வந்த இரண்டு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்த வேண்டும்.
இதேவேளை ஜப்பான் மட்டுமல்லாது தாய்லாந்து உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கையாக, பல தற்காப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.