பாலியல் உறவு வயது குறித்து வெளியிட்ட ஜப்பான்!
ஜப்பானில் பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 13 இலிருந்து 16 ஆக அதிகரிப்பதற்கு அந்நாட்டு நீதியமைச்சு நியமித்த குழுவொன்று சிபாரிசு செய்துள்ளது.
பாலியல் வல்லுறவுகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான அதிகபட்ச கால எல்லையும் 10 லிருந்து 15 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளது. ஜி7 நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஜப்பானிலேயே பாலியல் உறவுக்கான சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது மிகவும் குறைவாக உள்ளது.
ஜேர்மனி, இத்தாலியில் இது 14 வயதாகவும், பிரான்ஸில் 15 ஆகவும், பிரிட்டன், அமெரிக்காவில் 16 ஆகவும் உள்ளது. இந்நிலையில் ஜப்பானிலும் குறைந்தபட்ச வயதை 16 ஆக அதிகரிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஜப்பானில் தற்போதுள்ள சட்டங்களின்படி, வல்லுறவு சம்பவங்களின்போது வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இருந்தது என்பதையும் தடுப்பது சாத்தியமற்றதாக இருந்தது என்பதையும் பாதிக்கப்பட்டவர்கள் நிரூபித்தாலேயே குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளியாக்கப்பட முடியும்.
இது தொடர்பான சட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஜப்பானில் பாலியல் வன்முறை சந்தேக நபர்கள் வழக்குகளில் விடுவிக்கப்படுவது அதிகரித்ததால், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்யக்கோரி 2019 ஆம் ஆண்டு பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பாலியல் வன்முறைகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பதின்ம வயதான தனது மகளுடன் பாலியல் உறவு கொண்ட நபர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமையும் நடந்தது.
மேற்படி சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவு நடந்ததாக நீதிமன்றம் அறிந்த போதிலும் அந்நபர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் மேன்முறையீட்டையடு;தது அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
மற்றொரு வழக்கில், மதுபோதையிலிருந்த பெண், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவித்தாரென தான் தவறுதலாக கருதியதாக சந்தேக நபர் கூறியதால் அந்நபர் விடுவிக்கப்பட்டார்.