திரைப்பட விமர்சனத்தை விரிவாக பதிவிட்டவருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
ஜப்பானின் புகழ்பெற்ற 'காட்ஸில்லா மைனஸ் ஒன்' (Godzilla Minus One) திரைப்படம் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் ரகசியங்களை (Spoilers) தனது இணையதளத்தில் பதிவிட்ட 39 வயதுடைய வத்தாரு தாகையுச்சி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள், வசனங்கள் மற்றும் கதைக்களத்தை மிக நுணுக்கமாக விவரித்ததன் மூலம் அவர் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியுள்ளதாக டோக்கியோ நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒரு மில்லியன் யென் அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும், அவரது சிறைத்தண்டனை நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த இணையதளத்தின் மூலம் தாகையுச்சி கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் விளம்பர வருவாயாக சுமார் 36 மில்லியன் யென்களை ஈட்டியுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
சாதாரணத் திரைப்பட விமர்சனங்கள் சட்டப்பூர்வமானவை என்றாலும், அசல் படத்தின் தனித்துவமான வசனங்கள் மற்றும் 12 க்கும் மேற்பட்ட நிழற்படங்களைப் பயன்படுத்தி வாசகர்கள் முழுப் படத்தையும் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரை அமைந்திருந்ததே குற்றமாகக் கருதப்பட்டது.
ஜப்பானிய பொழுதுபோக்குத் துறையை அறிமுகப்படுத்தும் நோகிலேயே தான் இதைச் செய்ததாக அவர் வாதிட்ட போதிலும், லாப நோக்கத்திற்காக சட்டவிரோதமாக இதனைச் செய்துள்ளதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இணையதளங்களில் 'ஸ்பாய்லர்' கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.