கனடாவில் மற்றுமொரு கன்சர்வேட்டிவ் உறுப்பினர் கட்சித் தாவல்
கனடாவில் மேலும் ஒருகன்சர்வேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் கட்சித் தாவி லிபரல் கட்சியில் இணைந்துள்ளார்.
இதன் மூலம் பிரதமர் மார்க் கர்னி தலைமையிலான லிபரல் அரசு பெரும்பான்மை அதிகாரத்தை பிடிப்பதனை மேலும் நெருங்கியுள்ளது.
அல்பெர்டா மாகாணத்தைச் சேர்ந்த எட்மண்டன் ரிவர்பெண்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மெட் ஜெனெரோ Matt Jeneroux, புதன்கிழமை லிபரல் கட்சியில் இணைவதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு அரசியலிலிருந்து விலகுவேன் என தெரிவித்திருந்த அவர், தற்போது நிலவும் தேசிய ஒற்றுமைச் சூழ்நிலை குறித்து சிந்தித்தபின் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
முன்னதாக நவம்பர் மாதம் நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த கிறிஸ் என்டோர்மன்ட் மற்றும் டிசம்பர் மாதம் டொரொன்டோ பகுதியைச் சேர்ந்த மைக்கல் மா ஆகியோரும் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து லிபரல்களுடன் இணைந்திருந்தனர்.
ஜெனெரோ, சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெற்ற World Economic Forum மாநாட்டில் பிரதமர் கார்னி ஆற்றிய உரை தான் தனது முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
“தேசிய ஒற்றுமை நெருக்கடி எவ்வளவு தீவிரமானது என்பதை அந்த உரை வெளிப்படுத்தியது,” என்றார். அவர் தனது முடிவை காலை 10.15 மணியளவில் கன்சர்வேட்டிவ் தலைவர் பியே பொலியேவ் உள்ளிட்ட கட்சி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் கார்னி சமூக ஊடகத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
ஜெனெரோ பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகள் தொடர்பான சிறப்பு ஆலோசகராக பணியாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது ஊதியமில்லா பதவி எனவும் கூறப்பட்டுள்ளது.