வெளிநாட்டில் இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி பலியான கனேடிய இளைஞர்
ஜெருசலேமில் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இரட்டை குண்டுவெடிப்பில் கனேடிய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனியர்கள் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இது என பொலிசார் சந்தேகிக்கப்படும் இச்சம்பவத்தில் 22 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். முதல் குண்டுவெடிப்பு நகரின் எல்லையில் நெரிசலான பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பட்டது.
இரண்டாவது குண்டுவெடிப்பு அரை மணி நேரம் கழித்து ரமோட் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கனேடிய குடிமகனான 15 வயது Shechopek சிக்கியுள்ளதுடன், காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத செமினரிக்கு செல்லும் வழியிலேயே Shechopek என்ற இளைஞர் குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
முதல் தாக்குதலில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்குரிய வகையில் மோசமடைந்து உள்ளது.
5 பேர் சற்று தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். இதுதவிர, 11 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு மவுண்ட் ஸ்கோபஸ் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 2-வது தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதில், ஆணிகளை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் ஹடாஸ்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
ஜெருசலேமில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல்களில் கனேடியர் ஒருவர் பலியானதுடன் மொத்தம் 22 பேர் காயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.