சினிமா பாணியில் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான நகைகள் கொள்ளை
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சினிமா பாணியில் மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. தென் கலிபோர்னியாவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்காட்சியொன்றுக்கு ஆயுத பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட ட்ரக் வண்டியில் இருந்த தங்க ஆபரணங்கள், வைரங்கள் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
தென் சென் பிரான்ஸிஸ்கோவிலிருந்து இந்த வாகனம் கலிபோர்னியாவிற்கு ஆபரணங்களை போக்குவரத்துச் செய்த வேளையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ட்ரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட 25 முதல் 30 ஆபரணப் பைகள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளதாக பொருட்களை இழந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், களவாடப்பட்ட நகைகள் மற்றும் வைரங்களின் பெறுமதி 10 மில்லியன் டொலர்களிலும் குறைவு பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

களவாடப்பட்ட பொருட்களுக்காக நட்டஈடு வழங்கத் தயார் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றிய பூரண விபரங்களை வெளியிட முடியாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறைந்த காப்புறுதி கட்டணங்களை செலுத்துவதற்காக பெறுமதி குறைத்து காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாரியளவு தொகை பெறுமதியான ஆபரணங்கள், வைரங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ள போதிலும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களோ, பாதுகாப்பு தரப்பினரோ இந்த சம்பவம் எங்கே இடம்பெற்றது, எவ்வாறு இடம்பெற்றது, சம்பவத்தில் யாரேனும் காயமடைந்தனரா போன்ற எந்தவொரு விபரங்களையும் வெளியிட மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஆபரணங்கள் மற்றும் இரத்தினக் கற்கள் என்ற தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி அமெரிக்காவின் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        