அமெரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட யூத மக்கள்; பிரிட்டனில் இரு இளைஞர்கள் கைது!
அமெரிக்காவின் டெக்ஸாஸில் யூத வழிபாட்டுத்தலத்தினுள் பொதுமக்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரிட்டனில் இரு பதின்மவயது இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வழிபாட்டுத்தலத்தினுள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்தவர் பிரிட்டிஸ் பிரஜை என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை மான்செஸ்டர் மேற்கில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களின் வயது மற்றும் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
அதேசமயம் அமெரிக்காவின் விசாரணைகளிற்கு தொடர்ந்தும் உதவிவருவதாகவும் அந்த பகுதி மக்களை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடர்பில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை தடுத்துவைத்து விசாரணை செய்கின்றோம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அக்ரம் இரண்டு வாரங்களிற்கு முன்னர் பிரிட்டனிலிருந்து நியுயோர்க் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவர் நீண்டகால குற்றப்பின்னணியை கொண்டவர் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ள நிலையில்,
அவர் எவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். டெக்ஸாஸின் டலசில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து பத்து மணித்தியாலத்தின் பின்னர் மலிக் பைசல் அக்ரம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேற்றிரவு தனது குடும்பத்தின் சார்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள சந்தேகநபரின் சகோதரர் குல்பர், தாங்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்,பொலிஸார் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து பணயக்கைதிகள் பிடித்துவைக்கப்பட்டிருந்தவேளை மலிக் பைசல் அக்ரமை தொடர்புகொண்டு அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை என சகோதரர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சகோதரர் நாங்கள் பேரதிர்ச்சியில் சிக்குண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். எவ்பிஐ விசாரணைகள் இடம்பெறுவதால் எங்களால் அதிகம் தெரிவிக்க முடியாது ஒரு குடும்பமாக நாங்கள் அவரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம் என்றும், துரதிஸ்டவசமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாங்கள் இறுதிவரை எங்கள் சகோதரருடன் தொடர்பிலிருந்தோம் என்றும், பணயக்கைதிகளை விடுதலை செய்யுமாறு கேட்டோம்,எங்கள் சகோதரர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என்ற போதிலும் அவர் ஆட்களிற்கு உயிராபத்து ஏற்படுத்தக்கூடியவர் இல்லை,அவரை சரணடையச்செய்வதற்காக எங்களால் எதனையும் செய்ய முடியவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.






