ஏலம் விடப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய ஜாப் அப்ளிகேஷன்; எவ்வளவு தெரியுமா?

Vasanth
Report this article
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த 1973ஆம் ஆண்டு வேலை கேட்டு விண்ணப்பித்த அப்ளிகேஷன், பிரிட்டனில் ஏலம் விடப்பட்ட நிலையில், ஒற்றை பக்கம் கொண்ட அந்த விண்ணப்பம், இந்திய மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஐ-போன் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் ஆப்பிள். இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இவர் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கர்களின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர். அத்துடன் உலகின் மிகப்பெரிய, பிரபலமான நிறுவனமாக ’ஆப்பிள்’ தொடர்ந்து இருந்து வருவதில், பெரும்பங்கு ஸ்டீவ் ஜாப்ஸ் உடையது. தகவல் தொழில்நுட்ப துறையில் செய்த புரட்சிகளுக்காக ஸ்டீவ் ஜாப்ஸ் போற்றப்பட்டு வருகிறார்.
அதற்காக அவர் கண்ட கனவும் அதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் பிரம்மிக்கவைப்பவை. ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு தொழில்முனைவராக, கண்டுபிடிப்பாளராக, தொழில்நுட்பத்தில் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட எழுதிய வேலை விண்ணப்பத்தை, பிரிட்டனை சேர்ந்த, சார்டர்பீல்ட்ஸ் என்ற இணையதளம் ஆன்லைனில் ஏலம் விட்டது.
அந்த விண்ணப்பத்தில் ஆங்கில இலக்கியம் படித்திருப்பதாகவும், கம்ப்யூட்டர், கால்குலேட்டர், தொழில்நுட்பம், டிசைன் இன்ஜினியரிங்கில், சிறந்த அறிவை பெற்றிருப்பதாகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் எந்த நிறுவனத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்ற தகவல் அதில் இல்லை. ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இருந்து அவர் வெளியேறிய நேரத்தில் விண்ணப்பித்திருப்பார் என நம்பப்படுகிறது.
பின்னர் ஒரு வருடம் கழித்து அடாரி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக அவர் வேலையில் சேர்ந்தார். இந்த நிலையில் 1976 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு வரை அவர் அங்கு பணியாற்றினார் என அந்த ஏல நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கிய இந்த ஏலம், மார்ச் 24ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஏலத்தில், அவரது விண்ணப்பத்தை, 162,000 பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில், சுமார் 1.6 கோடி ரூபாய்) கொடுத்து ஏலம் எடுத்திருக்கின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு அவரது விண்ணப்பம் ஒன்று இதுபோல் ஏலம் விடப்பட்டது. அதனை பிரிட்டனை சேர்ந்த பெயர் குறிப்பிடாத ஒருவர் 1.75 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்திருந்தார்.