இஸ்ரேலின் தாக்குதலால் குடும்பத்தை இழந்து தவிக்கும் ஊடகவியலாளர்; கண்டனம் வெளியீடு
காசாவில் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலால் அல்ஜசீராவின் ஊடகவியலாளர் வயெல் டாடோசின் குடும்பத்தினர் கொல்லப்பட்டமைக்கு அல்ஜசீரா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நுசெய்ரட் அகதிமுகாமில் , அல்ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தினர் அடைக்கலம் புகுந்திருந்தவேளை இடம்பெற்ற இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் குரல்
பாலஸ்தீனியர் பத்திரிகையாளர்களை இலக்குவைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ஊடகவியலாளரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள அல்ஜசீராவின் அராபிய பிரிவின் ஊடகவியலாளர் டமெர் அல்மிசால், ஊடகவியலாளர் டாடோசினை காசாவின் குரல் என வர்ணித்துள்ளார்.
வயெல் டாடோஸினை உலகபத்திரிகை துறையினதும் காசாவின் பத்திரிகை துறையினதும் தூண் என வர்ணித்துள்ள அவர், பல வருடங்களாக இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்தியை அவரே வெளியிட்டுள்ளார் எனவும் டமெர் அல்மிசால் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் வயெல் தொடர்ந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டுவந்தார்.
அதோடு ,காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக அவர் அங்கிருந்து வெளியேற மறுத்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது குரல் தொடரும் அதற்கான உத்தரவாதத்தை எங்களால் வழங்க முடியும் ஒவ்வொரு நாளும் உண்மையை கண்டுபிடிப்பதற்காக இந்த தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடுவோம் எனவும் அல்ஜசீராவின் அராபிய பிரிவின் ஊடகவியலாளர் டமெர் அல்மிசால் தெரிவித்துள்ளார்.