கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது கேரள பெண்ணின் மரண தண்டனை
ஏமனில் கொலை வழக்கில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நேற்ற நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளாவின் காந்தபுரம் ஷேக் அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டால் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா (38), கடந்த 2017ல் ஏமனில் தனது தொழில் கூட்டாளி தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட நர்ஸ்
இதனால் சனா சிறையில் அடைக்கப்பட்ட நர்ஸ் நிமிஷாவுக்கு ஏமன் உச்ச நீதிமன்றம் கடந்த 2020ல் மரண தண்டனை விதித்தது. இந்த மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட இருந்தது. இதிலிருந்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் கடுமையாக போராடினர்.
நிமிஷாவின் தாயார் கடந்த ஓராண்டாக ஏமனில் தங்கி முயற்சி மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் இந்திய அரசும் முடிந்த அனைத்து முயற்சிகளை செய்ததாகவும், இனியும் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது.
இந்நிலையில், நிமிஷாவின் மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் ஒத்தி வைக்கப்படுவதாக ஏமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷரியத் சட்டப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் தரப்படும் ரத்த பணம் எனும் இழப்பீடு தொகையை ஏற்றுக் கொள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சம்மதித்தால் தண்டனையைில் இருந்து தப்ப முடியும். இதற்கான இழப்பீட்டை வழங்க நிமிஷா குடும்பத்தினர் முன்வந்த போதிலும், கொலையான தலால் குடும்பத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
இதற்கிடையே இந்தியாவின் கிராண்ட் முப்தி என்றழைக்கப்படும் கேரள காந்தபுரம் ஷேக் அபுபக்கர் முஸ்லியார் ஏமனில் உள்ள மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்லாமியர்களில் சன்னி பிரிவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அபுபக்கர் முஸ்லியார் கூறியதன் பேரில், தலால் குடும்பத்தினர் முதல் முறையாக நேற்று பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.