ரஷ்ய ராணுவ முகாமில் கேரள இளைஞர் உயிரிழப்பு
ரஷ்ய ராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சந்தீப் (36) ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருக்கூர் அருகே உள்ள நாயரங்காடி என்ற கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியனான இவர், ரஷ்யாவில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அங்கு சென்றார்.
ராணுவ கேன்டீன் ஒன்றில் பணி
இந்நிலையில் சந்தீப்பின் உறவினர் கூறுகையில்,
ரஷ்ய மலையாளிகள் சங்கத்தில் இருந்து 2 நாட்களுக்கு முன் எங்களுக்கு தகவல் வந்தது. ரஷ்ய ராணுவ கேன்டீனில் பணியாற்றி வந்த திருச்சூரை சேர்ந்த ஒருவர் ஏவுகணை தாக்குதலில் இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரை அவர்கள் அடையாளம் கண்டறிய விரும்பினர். அவர்கள் அளித்த தகவல்களை சரிபார்த்ததில் உயிரிழந்தது சந்தீப் எனத் தெரியவந்துள்ளது.
தொடக்கத்தில் மாஸ்கோவில் பணியாற்றுவதாக சந்தீப் கூறினார். ஒரு மாத சம்பள பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பினார். பிறகு அவர் மிக அரிதாகவே குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார். அவர் மாஸ்கோவுக்கு வெளியே ராணுவ கேன்டீன் ஒன்றில் பணியாற்றி வருவதாக பிறகு எங்களுக்கு தெரியவந்ததாக உயிரிழந்தவரின் உறவினர் கூறியுள்ளார்.
அதேவேளை ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.