காரின் தரையில் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள்
ஒன்றாரியோ மாகாண நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை மாகாண பொலிஸார் (OPP) சோதனையிட்டபோது, பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக இரு குழந்தைகள் காரின் தரையில் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக அல்பெர்ட்டாவைச் சேர்ந்த சாரத மீது பொலிஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 10-ஆம் திகதி, நார்த் ஷோர் டவுன்ஷிப்பில் உள்ள அல்கோமா மில்ஸ் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 17-இல் பொலிஸார் போக்குவரத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மேற்கு நோக்கிச் சென்ற கார் ஒன்று லோசன் வில்லேஜ் வீதிக்கும் நெடுஞ்சாலை 538-க்கும் இடையே மிக அதிவேகமாகச் செல்வதைக் கவனித்த பொலிஸார், அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.
காரை நிறுத்தி ஓட்டுநரிடம் பொலிஸார் விசாரித்தபோது, காரின் உள்ளே இருந்த இரு குழந்தைகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி முறையாக இருக்கைகளில் அமர வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
அதில் ஒரு குழந்தை காரின் தரையிலேயே அமர வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
காரில் இடநெருக்கடி காரணமாகவே குழந்தைகள் அப்படி அமர வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்த பொலிஸார், சட்டப்பூர்வ பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
காரில் பயணித்த இரண்டு முதியவர்கள் காரில் இருந்து இறக்கப்பட்டு, அருகில் உள்ள உள்ளூர் விடுதி ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் குழந்தைகள் இருவரும் சட்டப்படி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, அந்த வாகனம் 'பிளைண்ட் ரிவர்' பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குழந்தைகளுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பு இருக்கை அமைப்புகள் பொருத்தப்பட்ட பின்னரே, அந்த வாகனம் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, அல்பெர்ட்டா மாகாணம் ஏர்ட்ரி பகுதியைச் சேர்ந்த 33 வயது ஓட்டுநர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனத்தை இயக்கியமை, பயணிகள் இருக்கை வார் அணியத் தவறியமைக்கான 3 குற்றச்சாட்டுகள், 16 வயதுக்குட்பட்ட பயணிகள் இருக்கை வார் உள்ள இடத்தில் அமராமல் இருந்தபோது வாகனத்தை இயக்கியமைக்கான 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது ஓட்டுநர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் ஒன்றாரியோவில் உள்ள போக்குவரத்து நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் தங்கள் காரில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் முறையாகப் பாதுகாப்பு வார்ப்புகளை அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாகக் குழந்தைகள், அவர்களின் வயது, எடை மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட சிறார் பாதுகாப்பு இருக்கை அமைப்புகளில் பாதுகாப்பாக அமர வைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.