கர்ப்பிணியை கொன்று வயிற்றிலிருந்த குழந்தையை கடத்திய பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்
கர்ப்பிணியான யுவதியைக் கொன்று, வயிற்றை வெட்டி க குழந்தையை கடத்திய அமெரிக்கப் பெண்ணொருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 52 வயதான லிசா மொன்ட்கொமேரி (Lisa Montgomery) எனும் பெண்ணுக்கே விஷ ஊசி ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1923 ஆம ஆண்டின் பின்னர் அமெரிக்காவில் பெண்ணாெருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். 67 வருட காலத்தில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதலாவது பெண் லீசா ஆவார்.
இண்டியானா மாநிலத்தின் டெரோ ஹோட் நகரிலுள்ள சிறையில் அமெரிக்காவின் கிழக்குப் பிராந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.31 மணிக்கு லிசா மொன்ட்கொமேரி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2004 டிசெம்பர் 16 ஆம் திகதி அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் பொபி ஜோ ஸ்டீனெட் (Bobbie Jo Stinnett) எனும் 23 வயது கர்ப்பிணியை கொலை செய்தமைக்காகவே லீசா மொன்ட்கொமேரிக்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.
இதேவேளை இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட லிசா மொன்ட்கொமேரியின் சட்டத்தரணி கெல்லி ஹென்றி விடுத்த அறிக்கையில்,
லிசா மொன்ட்கொமேரிக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானமானது குரூரமானதும், சட்டவிரோதமானதும், சர்வாதிகாரத்தின் அநாவசிய அதிகாரப் பிரயோகமும் ஆகும் என விமர்சித்துள்ளார்.