பேச்சுவார்த்தையின் பின் DNA ஆதாரங்களை அவசரமாக அழித்த கிம் ஜாங் உன் உதவியாளர்கள்
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது.
ரஷ்ய ஜனாதிபதி புதினும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதினுடனான உரையாடல்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனாவுக்கு தனது பிரத்யேக குண்டு துளைக்காத ரெயிலில் வந்திருந்தார். பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து கிம் ஜாங் உன் உரையாடினார்.
இந்நிலையில் புதினுடனான உரையாடலுக்கு பின் அறையில் இருந்து கிம் ஜாங் உன் வெளியேறியதும் அவரது உதவியாளர்கள் அந்த அறையை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.
கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை, அதன் கைப்பிடி, அவர் தொட்ட இடங்கள், மேசை மற்றும் பொருட்களை அவசர அவசரமாக துடைத்தனர்.
அவர் குடித்து வைத்த கண்ணாடி கோப்பையை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிரி உளவாளிகள் கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ உள்ளிட்ட உயிரியல் தடயத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அவரது தலைமுடி, தோல் அல்லது உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ சேகரிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், அவரது உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதை தடுப்பதற்கும் இந்த முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.