மலேசியாவுடனான தூதரக உறவுகளை நிறுத்திய கிம் ; காரணம் இதுதான்

Vasanth
Report this article
மலேசியாவுடன் அனைத்து இராஜதந்திர உறவுகளையும் நிறுத்துவதாக வட கொரியா இன்று அறிவித்தது. வட கொரியாவைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்காவிற்கு ஒப்படைக்க அனுமதிக்கும் மலேசியாவின் முடிவு காரணமாக வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அணுசக்தி நிலைப்பாடு தொடர்பாக ஜோ பிடென் நிர்வாகம் வடகொரியாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் விரோதப் போக்கு வளர்ந்து வருவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், மலேசியாவில் வசிக்கும் வடகொரிய நாட்டினருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பணமோசடி குற்றச்சாட்டுகள், தங்களது எதிரியால் திட்டமிடப்பட்ட அபத்தமான புனைகதை மற்றும் முழுமையான சதி எனத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து வட கொரியாவிற்கு எதிராக மிகப் பெரிய விரோதச் செயலைச் செய்த மலேசியாவுடனான இராஜதந்திர உறவுகளை முற்றிலுமாக நிறுத்துவதாக வடகொரிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்ததுடன் அமெரிக்கா இதற்காக உரிய விலையை செலுத்தும் என்றும் அது எச்சரித்தது. எனினும் வட கொரியா தனது தூதர்களை மலேசியாவிலிருந்து எப்போது வெளியேற்றும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரரை 2017’இல் கொன்றதில் இருந்து வட கொரியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள் முடங்கியுள்ளன. மலேசிய தூதர் யாரும் தற்போது வட கொரியாவில் இல்லை என பார்வையாளர்கள் நம்புகின்றனர். மலேசியாவின் வெளியுறவு அமைச்சக வலைத்தளம், வட கொரிய தூதரகம் கிம் யூ சாங், சார்ஜ் டி ஆஃபைர்ஸ் மற்றும் கவுன்சிலர் மற்றும் ஆறு ஊழியர்களால் வழிநடத்தப்படுகின்றதாக தெரிவிக்கிறது.
இராஜதந்திர உறவுகளைத் துண்டிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும். தென்கிழக்கு ஆசியாவில் வர்த்தகம், தொழிலாளர் ஏற்றுமதி மற்றும் சில சட்டவிரோத வணிகங்களை கையாளுதல், வட கொரியாவின் முக்கியமான பொருளாதார மையங்களில் ஒன்றாக மலேசியா நீண்ட காலமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் “வட கொரியா ஒரு கடினமான பாதையை எடுத்துக்கொள்கிறது, ஏனெனில் அது பின்வாங்கக்கூடாது என கருதுகிறது. இதனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் பிடென் அரசாங்கத்துடன் மோதல் போக்கு அதிக அளவில் இருக்கும்” என்று தென்கொரியாவின் கொரிய பல்கலைக்கழக பேராசிரியர் நாம் சுங்-வூக் கூறினார்.
அத்துடன் மலேசிய ஒப்படைப்பு முடிவுக்கு கடுமையாக பதிலளிக்காவிட்டால், மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இதேபோன்ற சிக்கலில் சிக்கக்கூடும் என்று வட கொரியா கவலைப்படக்கூடும் என்றும் பேராசிரியர் நாம் சுங்-வூக் மேலும் கூறினார்.