அமெரிக்க இராணுவ ரகசியம் கசிந்த விவகாரம் ; ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்
அமெரிக்க ராணுவ ரகசியம் கசிந்த விவகாரத்தில், 'தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்ய மாட்டேன்' என நிருபர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சிப் படை தலைவர்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான உயர் மட்ட அதிகாரிகள்'சிக்னல்' என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு துறை
இது அமெரிக்க பாதுகாப்பு துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழுவில், அமெரிக்காவின் 'தி அட்லாண்டிக்' இதழின் தலைமை ஆசிரியர் எதிர்பாராதவகையில் சேர்க்கப்பட்டிருந்தது தான்.
இதனை அந்தக் குழுவில் இருந்த யாருமே கவனிக்காமல் இருந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ ரகசியம் கசிந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல் பரவியது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ட்ரம்ப் என்னைத் தவிர வேறு யாரும் அந்த முடிவை எடுக்க முடியாது. நானும் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பென்டகன் தலைவர் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஹவுதி படையினருக்கு எதிரான வான்வழித் தாக்குதலுக்கான தனது நிர்வாகத்தின் திட்டங்கள் தற்செயலாக கசிந்ததற்காக யார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. என அவர் பதில் அளித்துள்ளார்.