உடனடியாக வெளியேறுங்கள்; பிரான்ஸ் விடுத்த உத்தரவு!
ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரான்ஸ் தனது பிரஜைகளை எச்சரித்துள்ளது.
கைது செய்யப்படும் அபாயம்
காரணமில்லாமல் கைது செய்யப்படும் அபாயம் ஈரானில் நிலவுவதால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் தன் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
பிரான்சிலிருந்து ஈரானுக்குச் சென்றுள்ள யாராக இருந்தாலும், இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் உட்பட, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் காணப்படுகிறது.
அதோடு , நியாயமான விசாரணையையும் அந்நாட்டில் எதிர்பார்க்கமுடியாது என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது இணையதளத்தில் கூறியுள்ளது.
மேலும் பிரெஞ்சுக் குடிமக்கள் இருவரை ஈரான் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதைத் தொடர்ந்து, ஈரான் சர்வாதிகார செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதாக பிரான்ஸ் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் விவகாரம்
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு பொலிஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்ற நிலையில் போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.