வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள் ; லெபனானில் எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் அச்சம்!
லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், லெபனானில் எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் அச்சம் கொண்டுள்லதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள்
நேற்றையதினம் லெபனானில் பேஜர் வெடித்து சிதறியதில் பலியான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 3 பேர் மற்றும் ஒரு குழந்தையின் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வைத்திருந்த வாக்கி-டாக்கிகள் வெடித்தது. அதேபோல் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது.
இதில் பலர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. அதோடு சம்பவத்தில் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வீடுகளில் இருந்த சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் லெபனான் முழுவதும் பதற்றம் நிலவி வருவதுடன் எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகையில்,
நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்து உள்ளோம். அதற்கு எங்களிடமிருந்து தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை என்றார். இவரது இந்த கருத்து லெபனான் மீதான தாக்குதல் சம்பந்தமானதா என்பது உறுதி செய்யப்பட வில்லை.
அதேவேளை லெபனானில் நடந்த பேஜர் வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.