மத்திய கிழக்கில் புதிய பதற்றம் ; லெபனான் பிரதமரின் அமெரிக்கா பயணம் ரத்து
இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்த லெபனான் அரசாஙகத்தின் முயற்சிக்கு அந்த நாட்டிற்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த லெபனான் பிரதமர் நவாப் சலாம், நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், முறையான போர்நிறுத்தம் ஏற்பட்ட பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும், லெபனானின் மூத்த ஷியா அரசியல் தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான நபீ பெர்ரி (Nabih Berri) வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெய்ரூட்டில் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தற்போதைய சூழலில் வீதிக்கு வந்து போராடுவதைத் தவிர்க்குமாறு ஹிஸ்புல்லா மற்றும் அதன் தோழமைக் கட்சியான அமல் இயக்கம் ஆகியன தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த உள்நாட்டுக் குழப்பத்தை இஸ்ரேல் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மத்தியில், லெபனானின் இந்த உள்நாட்டுப் பதற்றம் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.